Thursday, September 24, 2026

சம்பந்தம்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம்

உண்டெனில்,

கண்ணுக்கும் காட்சிக்கும் சம்பந்தம் உண்டு.

பெண்ணுக்கும் தாய்மைக்கும் பெருமை

உண்டெனில்,

எண்ணுக்கும் எழுத்துக்கும் ஏற்றம் உண்டு.

உண்மைக்கும் உரிமைக்கும் உடன்பாடு

உண்டெனில்,

அண்மைக்கும் அன்புக்கும் அருங்கதை உண்டு.

திண்மைக்கும் திறமைக்கும் தகைமை

உண்டெனில்,

திண்ணை பேச்சுக்கும் தெளிவாற்றல் உண்டு.


பன்மையில் ஒருமையும் பதுங்குதல்

உண்டெனில்,

நன்மையில் நல்லோர் நாற்புறமும் உண்டு.

இன்மையிலும் இன்பம் இடம்பெறுதல்

உண்டெனில்,

முன்பயின்ற அனுபவங்கள், முத்தாகி

ஞானமுறும். 

தன்வழியும் பிறர்வழியும், நம்வழிகள் என்றாகின், 

பின்வரும் தலைமுறைகள் நம்வழியில்

நலம்பெறும்.!

ப. சந்திரசேகரன். 

Monday, September 14, 2026

சாகாவரம்பெற்ற சாலமன் பாப்பையா


பட்டிதொட்டி எல்லாம் 

பேச்சுதமிழுக்கு 

பரவசமாய் தொட்டில் கட்டி

பக்குவமாய் கருத்துரைத்த 

பச்சைத் தமிழொன்று 

பண்டிகை காலத்தில்

காணொளிக்கு களிப்பூட்டி

இல்லங்கள் பலவற்றில்

இன்பத்தை கூட்டியது.


இருக்கையில் இலக்கியத்தை 

பருக்கை பருக்கையாய் 

சுவைத்ததோர் பட்டிமன்றம்

புதியதோர் களமமைத்து, 

குடும்பமும் சமூகமும் 

தொடும்பல தோற்றங்களை, 

தோலுரித்துக் காட்டியது. 

நடுவராய் நங்கூரமிட்டு, 

நிகழ்ச்சிநிரல் நாயகனாய் 

நீதிச்சுடர் தீபமென 

பதித்ததோர் தீர்ப்புகள், 

சாலமன் என்றதோர்

சரித்திரப்புதல்வனின்,

பெருத்தநல்அறிவுதனை,

கருத்துடன் கூட்டியது.


கார்மேக நிறம்கலந்த

பார்போற்றும் நடுவராய்,

ஊரிலும் உலகிலும்

உயிரோடு கலந்திட்ட

சாலமன் பாப்பையா,

காலம் கடந்தவரே!

போகா நினைவுகளில்

சாகாவரம் பெற்று

சோகம்தவிர்ப்பீரென,

சுகம்நிறை தீர்ப்பளித்தார்!

அகம்புறம் அனைத்திலும்

யுகம்பல படைத்திடுவார்

ப.சந்திரசேகரன்.

 

Friday, September 4, 2026

வழிகாட்டி



ஒளிக்கு  வழிகாட்டி,

வழிக்கு ஒளி காட்டி;

வாத்தியார் என்று 

செல்லமாய் அழைக்கும், 

நல்லுயிர், ஆசிரியன். 

உச்சிமுதல் பாதம்வரை, 

கச்சிதமாய் கவர்ந்திழுத்து, 

மெச்சிடும் கல்விதனை 

மெருகூட்டி முறையாக்கி,

தரமோடு  தகுதியினை

தரணியில் வலம்வர

தருவிக்கும் ஆசிரியரை,

அறமோடு வாழ்த்துதற்கு,

நாளொன்று போதாதே!

நாளெல்லாம் வாழ்த்திடுவோம்,

நீள்புவி நிறைந்திடவே!

ப.சந்திரசேகரன்.

 


Sweetness and light


            { Teachers' day greetings in advance.)

A day does not decide what stuff a teacher is!

A teacher's mind travels with time and rhyme,

Peeping into the minds of the wards, as peppermint,

Catching a place in the memories of students.

It is like a catapult hitting the ripe fruit, right. 

The ripe fruit tasting sweet, makes memories sweeter.

Every well-grown mind, is like a ripe fruit 

That owes its sweetness to the tree called teacher.


A competent teacher is not a cult but a structure, well built; 

A good teacher is like food for thought, hungrily bought.

A great teacher is a mate of mind-blowing motivators.

A lovely teacher wakes up, with love for his class and wards.

An excellent teacher evinces zeal to excel himself, every day. 

An exemplary teacher is an epitome of sweetness and light.

P. Chandrasekaran 

 

Wednesday, August 26, 2026

இரவும் பகலும்

இளமை இருக்கையில்

இரவைப் பகலாக்கலாம்.

முதுமையின் முனகல்

பகலை இரவாக்கும்.

மேகங்கள் இருண்டுவர,

பகலுக்கு போர்வையிடும்.

இரவின் இருளை

பவுர்ணமி இறக்கிவிடும்.

பகலிலும் இரவிலும்,

பலப்பல கனவுண்டு.

பகல்கனவு பலிக்காதெனில்

இரவின் கனவுகள்

பகலில் பலிக்குமோ?

வெளிச்சத்தில் குளிக்கும்

பளிச்சிடும் இரவுகள்

இருட்டறைப் பகலினை

இரட்டிப்பு ஆக்குமோ?

இரவுக்கும் பகலுக்கும்

ஒருநாளும் இறப்பில்லை.

இறக்கும் பொழுதுகள்

இரவாயினும் பகலாயினும்

உயிர்களின் ஓய்வீற்கு

செயற்கரிய செய்யுமாம்.

இரவு பகல்பாரா

கருணைமிகு உழைப்பில்

அரும்புவது உயர்வாம்.

பாரியின் தேரினால்

முல்லை பிழைத்தது

பாரினில் பொழுதுகள்

பகலென இரவென

வல்லுயிர் ஓம்பும்.

தில்லையில் சிவனோ

நெல்லையில் சிவனோ

எல்லைத் தெய்வமாய்

இரவிலும் பகலிலும்

பல்லுயிர் காத்திடும்

பொழுதுகள் பலவும்,

தொழுதிடும் திசைகளே!

ப.சந்திரசேகரன்.





Friday, August 14, 2026

எண்பதை எட்டும் இந்தியா.


இனிய சுதந்திரத்திருநாள் வாழ்த்துக்கள்.

======================================

எண்பதை எட்டுது எம்தசேச் சுதந்திரம்.

முன்பகை நீக்கிட,முயலட்டும் தந்திரம்.

அன்புடன் இயங்கட்டும் அரசு இயந்திரம்.

தன்பலம் கூட்டலே தரணியில் நிரந்தரம்.


பேச்சின் பெருஞ்சுவைப் பெருமிதம் மொழியே!

மூச்சுக் காற்றதன் தூய்மையின் வழியே,

ஏச்சினைக் குறைத்திடின்,இறங்கிடும் பழியே;

மாச்சர்யம் கடக்கும்,மொழியதன் விழியே!


படிக்கும் பாடங்கள் பழையதும் புதியதுமாய்,

இடித்தும் இசைத்தும் இயக்கிடும் சமத்துவம்.

தடித்ததோர் ஆணவம் தன்னிலை அறிந்திட,

துடித்திடும் உண்மை உயர்த்தும் உரிமையை!


உரிமைகள் உயர்ந்து ஔியினை கூட்டி

சரியெது தவறெது,நற்சான்றுடன் கூறும்!

பரிவினைப் பெருக்கும் பயிரே,சுதந்திரம்.

பிரிவினை போக்கும் பசுமையே, சுதந்திரம்!

ப.சந்திரசேகரன்.


Tuesday, August 11, 2026

கதவு

கனவுக்கு கதவுகள் பல உண்டு.

கதவுக்கு கனவொரு களம் இல்லை.

திறப்பதும் மூடுவதும் கதவின் இலக்கு.

திருட்டுகள் நடந்திடின் அது விதிவிலக்கு.


பதவிக்கு கதவுகள் நாள்தோறும் பலவாகும்.

உதவிக்குத் தட்டுதல் மானுட மரபாகும்.

பிறப்பின் கதவுகள் திறப்பது தலைகீழாம்.

இறப்புக்கு கதவு காட்டும்வழி கால்முன்பாம். 


கூற்றினில் குலுங்கிடும் குறுமதிக் குணமென, 

காற்றினில் ஆடிடும் பழுதுற்ற பழங்கதவு.

நாதாங்கித் தாங்கும் கதவு வீழ்வதில்லை.

நாதாங்கும் சொல்வீழ,நற்குணம் நிற்பதில்லை!


உடலின் கதவிற்கு நோயே விருந்தாளி;

படரும் நோய்கள் கதாவாகும் மருந்திற்கு.

நோயும் மருந்தும், மனக்கதவின் மரக்கூலி.

தேயும் நம்பிக்கை துரத்திடும் மனக்கதவு.


மனக்கனவு திறப்பதோ மகிழ்ச்சியின் கதவு.

மனக்கணக்கு தோல்வியுற,அடையும் மதிக்கதவு.

கனவில் கதவெல்லாம் வானுக்கு வழிகாட்டும்;

கதவில்லா வாழ்விற்கு கனவுகளே கதவாகும்.

ப.சந்திரசேகரன்.