Tuesday, June 16, 2026

நெல்லுக்குள் அரிசியனெ

   
                      நண்பருக்கு அஞ்சலி.
                              16th June 2026

முகத்தில் முறுக்கேறிடினும்

அகத்தில் ஓர் குழந்தை நீ!

வகுப்பினில் நீ நுழைய,

வானரமும் வால்சுருட்டும்.

கரும்பலகையில் நீ கைபதிக்க

கணிதமே களிப்புறும்.

வெறும்பேச்சு பேசாது

வேலையை நீ பார்க்கையிலே,

குறும்பை தள்ளிவைத்து

குதூகலமாய்ப் குவித்திடுவர்

புதுக்கணித மலர்கள்பல.

நிமிர்ந்தநடை நீநடக்க,

அமர்ந்தவரும் நின்றவரும்

மாணவர் என்றிருப்பின்,

மரியாதை உனக்களித்து

மடமடவென் றோடிடுவர்.

போலித்தனம் ஒருபோதும்

ஆலிங்கனம் செய்ததில்லை,

ஆசிரியன் உன்னிடத்தில்!

அன்பரும் நண்பரும்

அண்டிடுவரும் தேனடையாய்,

என்றென்றும் நீயிருந்தாய்.

காலம் உன்பாதையிலே

கருவேலம் முட்களிட,

கால்வலுவும் மனவலியும்

கடந்துநீ எதிர்கொண்டாய்,

காலனின் கணக்குவழி.

ஞாலத்தில் நல்லோர்க்கு

கோலங்கள் மாறிடினும்

நல்லவர்கள் நெஞ்சத்தில்

நிலையாகக் குடியிருப்பர்.

நல்லவனாய் வாழ்ந்த நீ

நெல்லுக்குள் அரிசியனெ

நெஞ்சமெலாம் நிறைந்திருப்பாய்.

ப.சந்திரசேகரன்.

Tuesday, June 2, 2026

வானுயர்ந்த வண்ணத்தமிழ்..

ஐூன் மூன்று 2026

நீ பிறந்த நாளினிலே,

நினைவுகளை மரமாக்கி,

கடும்வெயில் காலத்தின், 

கருணைநிழ லாக்குகிடுவோம்.

நன்மைகள் பலசெய்தோம்; 

நண்பர்கள் வஞ்சித்தர்.

தோல்விகள் புதிதல்ல;

எத்தனை பத்தாண்டுகள்; 

எத்தனை சாதனைகள்!

கல்வியும் மருத்துவமும் 

கண்களாய்க்கொண்டு,

கனிவுடன் ஆற்றினோம், 

காலநிலைத் தொண்டு.

உன்தமிழின் உயர்வோடு 

உதித்திடும் சூரியனால்

ஒவ்வொரு நாளும், 

பதித்திடும் ஏடுகள், 

பறைசாற்றும் வரலாறு!. 

"தளராதே உடன்பிறப்பே",

என்றுநீ கூறு.

தெளிவும் தீரமும், 

தேயாது இருக்கும்வரை, 

அன்றாடம் உதிக்கும் 

ஆதவன் போல், 

வென்றாலும் தோற்றாலும், 

வீழ்வதில்லை விரல்நுனியால்! 

சென்றாலும் செல்லாமல், 

நீயிருப்பாய் எம்முடனே!

ஆடைகள் மாறலாம்;

மேடைகள் மாறலாம்.

அணிகள் மாறிடினும்,

பணிகள் தொடருமிங்கே!

தமிழ்த்தாயை தள்ளிவைத்து, 

வள்ளுவனின் நிறம்மாற்றும், 

வழிக்குழப்பம் நீங்கிடவே, 

மழித்தலையும் நீட்டலையும், 

அழித்திடுவர் அருந்தமிழர்.   

ஜூன் மூன்றின் நாட்குறிப்பு, 

வானுயரச் செய்திடுமாம், 

வண்ணத்தமிழ் வரலாற்றை!      

ப.சந்திரசேகரன்.