Saturday, May 16, 2026

போதையில் நின்று.

பாதை பழசெனில் 

போதையும் பழசுதான்.

"போதை வந்த போது 

புத்தியில்லையே"

எனப் பாடிய கவிஞன்தான்,

கிண்ணத்தை ஏந்தி 

வண்ணத்தில் நீந்தினான்.

நெஞ்சில் உள்ள நல்லதை, 

மிஞ்சிடும் போதை,

நஞ்சென நெறுங்கி

கொஞ்சிக் கொல்லுது.

பணமும் பதவியுமே 

பலமான போதையிங்கே!

புகழின் போதையில்

புதையும் நற்குணங்கள்.

ரசிகனின் போதையில்

ரகசியங்கள் ஏதுமில்லை.

நசுங்கிப் பிணங்களாய்

நடுத்தெருவில் வீழ்கையில்

நரபலிப் போதையே

சிரசினைத் தாக்குமாம்.

பிணங்கள் வீழ்கையில்

சுணங்கா மனதினுள்

சுர்ர்ரெனும் போதை.

வாழ்த்தின் போதையெல்லாம்

வீழ்த்திடும் விரல்நுணியில்.


உழைப்பவன் காய்ச்சுவதில்லை.

காய்ச்சுபவன் உழைப்பதில்லை.

கள்ளச் சாராயம் 

சட்டப்படி குற்றம்.

உள்ளச் சாராயம் 

ஊறிடும் போதையென!.

மதமும் மடமையும்,

மட்டையாக்கும் மனதை.

போதையில் நடக்கையில் 

ப்பதே நடனமாம்.

பாதை நேர்மையெனில்

நடனம்கூட  நடையாம். 

போதையில் திளைப்பவன்

நாதியற்றுப் போவான்.

நாதியற்றுப் போனாலும்

போதையின்றி வாழ்பவன்,

சூதுகள் கவ்வாது

நீதிவழிப் போவான்.

கீதையெனும் மூச்செடுத்து,

மூதுரைக் கடலில்

முத்தெடுத்து மீள்வான்.

ப.சந்திரசேகரன். 



1 comment:

  1. "...பாதை நேர்மையெனில்
    நடனம்கூட நடையாம்....." different thoughts 🤔

    ReplyDelete