Tuesday, August 11, 2026

கதவு

கனவுக்கு கதவுகள் பல உண்டு.

கதவுக்கு கனவொரு களம் இல்லை.

திறப்பதும் மூடுவதும் கதவின் இலக்கு.

திருட்டுகள் நடந்திடின் அது விதிவிலக்கு.


பதவிக்கு கதவுகள் நாள்தோறும் பலவாகும்.

உதவிக்குத் தட்டுதல் மானுட மரபாகும்.

பிறப்பின் கதவுகள் திறப்பது தலைகீழாம்.

இறப்புக்கு கதவு காட்டும்வழி கால்முன்பாம். 


கூற்றினில் குலுங்கிடும் குறுமதிக் குணமென, 

காற்றினில் ஆடிடும் பழுதுற்ற பழங்கதவு.

நாதாங்கித் தாங்கும் கதவு வீழ்வதில்லை.

நாதாங்கும் சொல்வீழ,நற்குணம் நிற்பதில்லை!


உடலின் கதவிற்கு நோயே விருந்தாளி;

படரும் நோய்கள் கதாவாகும் மருந்திற்கு.

நோயும் மருந்தும், மனக்கதவின் மரக்கூலி.

தேயும் நம்பிக்கை துரத்திடும் மனக்கதவு.


மனக்கனவு திறப்பதோ மகிழ்ச்சியின் கதவு.

மனக்கணக்கு தோல்வியுற,அடையும் மதிக்கதவு.

கனவில் கதவெல்லாம் வானுக்கு வழிகாட்டும்;

கதவில்லா வாழ்விற்கு கனவுகளே கதவாகும்.

ப.சந்திரசேகரன்.

2 comments:

  1. **".....நோயும் மருந்தும், மனக்கதவின் மரக்கூலி...."* *அட்சர இலட்சம் பெறும் வார்த்தை ஜாலம்🙏

    ReplyDelete