Monday, September 14, 2026

சாகாவரம்பெற்ற சாலமன் பாப்பையா


பட்டிதொட்டி எல்லாம் 

பேச்சுதமிழுக்கு 

பரவசமாய் தொட்டில் கட்டி

பக்குவமாய் கருத்துரைத்த 

பச்சைத் தமிழொன்று 

பண்டிகை காலத்தில்

காணொளிக்கு களிப்பூட்டி

இல்லங்கள் பலவற்றில்

இன்பத்தை கூட்டியது.


இருக்கையில் இலக்கியத்தை 

பருக்கை பருக்கையாய் 

சுவைத்ததோர் பட்டிமன்றம்

புதியதோர் களமமைத்து, 

குடும்பமும் சமூகமும் 

தொடும்பல தோற்றங்களை, 

தோலுரித்துக் காட்டியது. 

நடுவராய் நங்கூரமிட்டு, 

நிகழ்ச்சிநிரல் நாயகனாய் 

நீதிச்சுடர் தீபமென 

பதித்ததோர் தீர்ப்புகள், 

சாலமன் என்றதோர்

சரித்திரப்புதல்வனின்,

பெருத்தநல்அறிவுதனை,

கருத்துடன் கூட்டியது.


கார்மேக நிறம்கலந்த

பார்போற்றும் நடுவராய்,

ஊரிலும் உலகிலும்

உயிரோடு கலந்திட்ட

சாலமன் பாப்பையா,

காலம் கடந்தவரே!

போகா நினைவுகளில்

சாகாவரம் பெற்று

சோகம்தவிர்ப்பீரென,

சுகம்நிறை தீர்ப்பளித்தார்!

அகம்புறம் அனைத்திலும்

யுகம்பல படைத்திடுவார்

ப.சந்திரசேகரன்.

 

3 comments:

  1. மிகவும் அருமையான பதிவு sir!
    சாலமன் பாப்பையா அவர்களைப் பற்றிய தங்களது கவிதையைப் படிக்கும்போது, சிறுவயதில் கேட்ட பட்டிமன்றங்களும் அவருடைய நகைச்சுவையான, அதே நேரத்தில் சிந்திக்க வைக்கும் பேச்சுகளும் நினைவுக்கு வந்தன. குறிப்பாக, அவரது தமிழையும், சமூகப் பார்வையையும் தங்களது வரிகளில் அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். படிக்கும்போது மிகவும் ரசித்தேன் ஐயா. இப்படிப்பட்ட பதிவுகள் பழைய நல்ல நினைவுகளை மீண்டும் கொண்டுவருகின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான கருத்துரைக்கு நன்றி திரு.செல்வன்.

      Delete