Thursday, October 1, 2026

தேசியக் கொடித் திருமகன்


காந்தியின் காலமின்று, 

வரலாற்றுப் புத்தகத்தில் 

நிரலற்று  நிற்கிறது.

உண்மையின் திரட்சி

உரலில் இடிபட்டு,

தரவுகள் பொடியாகி

உலக்கையே உலகாள்கிறது.

காந்தியைக் காணவில்லை!

ஆள்கொணர்வு மனுவுக்கு,

தாளுக்கும் திறனில்லை.

ரூபாய் நோட்டில்

பொக்கை புன்னகை,

போக்கை நகைக்கிறது.

கொன்றவரும் தின்றவரும்

கோலோச்சும் காலத்தில்,

மன்றங்கள் மதியிழந்து,

அன்றுகண்ட பெருமைகள்

இன்றும் நிலைத்திட,

மன்றாடும் சிலரிங்கே!

நல்லவரின் நாட்டுப்பற்று,

வல்லினத்தின் பொய்களிலே

வலுவிழந்து வாடுகிறது.

ஆண்டுக் கொருநாளேனும்,

கூண்டுக்  கிளியான

கோபுரத்தின்  உயர்வுள்ள 

கோவண  நாயகனை, 

கொடியேந்திப்  போற்றுவோம்!.

தேசியக் கொடியின்

திருமகனே மகாத்மா!

ப சந்திரசேகரன்.

 


1 comment: