மனசாட்சி மயங்கினால்
மதில்மேல் பூனை;
குருட்டுப் பூனைக்கு,
இருட்டொரு பாரமில்லை!
சாட்சிக்கூண்டில் பலநேரம்,
பொய்சாட்சி ஆலாபனை.
ஆயுதங்கள் கூர்மையானால்,
அறிவு மழுங்குகிறது;
தீர்ப்புகளின் கூர்மை,
ஆயுதக் கூர்மையை
ஆய்வு செய்கிறது.
வாதி பிரதிவாதிகளுக்காக
வழக்காடும் குரல்களுக்கு,
நாசுக்கும் நளினமுமே
பாசாங்குப் பரப்புரை!
'சட்டம் ஒரு இருட்டறை';
'தீர்ப்புகள் திருத்தப்படலாம்';
'நீதிக்குத் தண்டனை'.
திரைப்பட தலைப்புகளே!
உறங்கும் மனசாட்சி
நீதியைத் தாலாட்ட,
தீர்ப்புகள் தேய்வுறும் .
மனசாட்சி மாண்புரின்,
தீர்ப்புகளின் திவ்யதரிசனம்,
புனிதப்பயணத்தின் பின்புலம்.
நல்லவனைத் தாலாட்ட,
நீதிமன்றம் மெத்தையில்லை !
நீதியின் மடியென்றும்
தீயவனின் தெருக்கூத்துமேடை.
மனசாட்சிக் கும்பகர்ணன்
மல்லாந்து படுத்துறங்க,
நீதியின் தொட்டிலில்
நிம்மதியாய்க் கிடப்பராம்,
நீள்புவியின் நீசரெல்லாம்!
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment