ஓ சினிமா! ஓ சினிமா,
ஓ சினிமா வா!
கீற்றுக் கொட்டகைகளும்
கல்நார் கூரைகளும்
குளிர் ஊட்டப்படா
குறைநிறை அரங்குகளும்,
'சினிமா' எனச்சொல்லி,
சிந்தனைத் திரளாய்,
கதிரொளிக் கதைகளாய்
கருத்துரு வசனங்களாய்,
காட்சிகளில் கலந்து,
களிப்பூட்டியதொரு காலம்!
கூட்டுக் குடும்பங்களும்,
பாசப் பரவசங்களும்,
கிராமங்களும் நகரங்களும்,
தத்துவப் பாடல்களும்,
கறைபடாக் காதலும்,
மறைநூல் மகத்துவமும்,
பிறைநிலவுப் பெருக்கலென,
முறையோடு மனம்நிறைய,
இனிமையுடன் கூவினோம்,
"ஓ சினிமா ஓ சினிமா வா" என்று.
இன்றைய சினிமா
வென்றிடும் தொழில்நுட்பம்;
கொன்றிடும் உயிர்கள்,
குறுக்கும் நெடுக்குமாய்!
வரலாற்றைத் தோண்டி
வசமாய் வம்பிழுக்கும்;
குரல்களின் நியாயம்
சமீப வரலாற்றை,
சாட்சியாய்க் காட்டிடின்,
சாட்டை கொண்டடிக்கும்.
சோர்ந்த வரலாற்றில்
சுறுசறுப்பு ஏற்றி,
சவக்குழி தோண்டும்.
படைப்பின் ஆற்றல்
கூனிக் குறுகி,
பதுங்கிப் பதுங்கி
ஒதுங்கிச் சிலநாள்,
ஒவ்வாத சிலர்க்கு
சிரசினைச் சாய்க்கும்!
பாடல்கள் எல்லாம்
வரிகளைத் தின்று
ஒலிகளுக் கிடையே
'லைக்குகள்' குவிக்கும்
படைப்புகள் அனைத்தும்
தலைமுறைத் தவிப்பே!
மாறிடும் தலைமுறை
மாறாது கூறும்,
மாற்றம் ஒன்றே மாறாதென!
ஓ சினிமா ஓ சினிமா,
ஓ சினிமா வா!
அரங்குகள் பலவும்
குளிரினைச் சேர்த்து
பாப்கார்னோடு பலவும் கலந்து,
கிரங்கிடச் செய்யும்
சிலமணி நேரம்!
அரங்குகள் கடந்து
ஓ .டி. டி யாய்
இல்லக் கதவினை
இசைவுடன் தட்டும்.
ஓ சினிமா! ஓ சினிமா,
ஓ சினிமா வா!,
சிரித்து நீ என்றும்,
சிரிக்கச் செய்திடு.
ஆனால் புரிந்திடு,
ஆற்றல் காட்டும்
படைப்புகள் கூட
ஆளும் வர்க்கத்து
அதிகாரக் கணக்கே!
ப.சந்திரசேகரன்
👋👋
ReplyDelete