Friday, November 1, 2024

மெய்சிலிர்க்க,மெய்யழகன்

மெய்யொடு கைகோர்த்து

கொய்வது அன்புக்கனி.

வைய்யத்து வாழ்வினில்,

அன்பே வரம்தானே!.


தொய்விலா அன்போடு,

தெய்வத்தைத் தெளிவிக்கும் 

தீவிர வெளிப்படையாய்,

மெய்யழகன் கார்த்திக்!.


"அய்யோ பேரறியேன்;

அன்பின் தடம் மறந்தேன்;

செய்வது அறியாது,

பொய்யுரைத்து நின்றேன்",

எனக்குமுறும் அருள்மொழி,

அழகி அரவிந்த்சாமி!.


இருவரின் சந்திப்பில்,

அருள்மொழி தனையறிய,

உய்யும் உன்னதமும்,

மெய்யின் முழுத்திரளும்

நெய்யின் நறுஞ்சுவையாய்,

ஒன்றுபட உயிர்கலக்கும்.


கலைக்கடல் பிரேம்குமார்

பேரலைக் கருத்துருவால்,

பின்னுக்குப் பெண்தள்ளி,

ஆண்களுள்ளம் ஆர்ப்பரிக்கும்.


ஆகாயம் போல்விரிந்த

ஆளுயர நெகிழ்ச்சிதனில்,

மனதோடு மெய்சிலிர்க்கும்,

மனிதமலர் 'மெய்யழகன்'!.


சைக்கிளின் சரிதையில்,

சத்தியமே சக்கரங்கள்.

யாரிவன் என்றுணர்ந்த

பேரன்புப் பூரிப்பில்,

அருவியென அருள்மொழி,

கதவுதட்டிக் கைவலிக்கும்.


அடைக்கும்தாழ் உடைத்தெறிந்து,

புடைத்துநிறக்கும் அன்பங்கே!

வினாக்கள் விடையெழுப்ப,

விடைகள்பல வினாஎழுப்பும்;

அடைத்தேனின் இனிப்பாகி,

அன்பொழுகும் 'மெய்யழகன்'!

ப.சந்திரசேகரன்.